வணக்கம் என்ற கையெழுத்து வடிவம்

வணக்கம்

இது என் கருத்துக்களை உங்களுடன் பகிர்வதற்கான இடம். பொது வெளியில் முழு நேர கருத்தாளனாகக் கடந்த 34 வருடங்களாக இயங்கி வரும் என் கருத்துக்களை, இதுவரை எழுதியவற்றை, இனி எழுதுபவற்றை, வெவ்வேறு செயல்பாடுகளின் பதிவுகள் எல்லாவற்றையும் ஒரு கூரையின் கீழ் மெல்ல மெல்லக் கொண்டு வர வேண்டும் என்று என் இளம் நண்பர்கள் விரும்புவதால் இங்கே வந்திருக்கிறேன்.

பத்திரிக்கை, நாடகம், சின்னத்திரை, பெரிய திரை, பயிலரங்கங்கள் என்று பல்வேறு தளங்களில் செயல் பட்டு வருகிறேன். மனித வாழ்வைத் தொடும் அனைத்தின் மீதும் எனக்கு உள்ள அக்கறையே, பல தடைகளையும் மீறி என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.

என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை. என் இணைய வீட்டுக்கு நீங்கள் வந்திருப்பதற்கு நன்றி.

ஞாநியின் கையொப்பம், அக்டோபர் 2008
புதுசு என்ற கையெழுத்து வடிவம்

சமீபத்திய பதிவுகள்

ஊர்சுற்றி புராணம்

கடந்த சில மாதங்களாக அணு உலைகள் பற்றி அரசாங்கம், அப்துல் கலாம், அமைச்சர் நாராயணசாமி, ஆதரவாளர் தா.பாண்டியன் மற்றும் ஃபேஸ்புக்கில் மட்டும் தேசபக்தர்களாக வலம் வரும் சில அறிவுஜீவிகள் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் எனக்கு ரத்தக் கொதிப்பு எகிறி இன்னொரு இதய அதிர்ச்சி ஏற்பட்டு இதை எழுதமுடியாமல் கூட போய்விட்டிருக்கும். என்னைக் காப்பாற்றுவது …

அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு

வணக்கம். நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தை செய்திருக்கிறீர்கள். கூடன்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது …

அமெரிக்காவில் கம்யூனிசம் ! :புதியதோர் உலகம் செய்வோம்…

கடந்த ஓராண்டில் துனீஷியா, எகிப்து,லிபியா என்று வெவ்வேறு நாடுகளில் மக்கள் திரளாகக் கூடி ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது அமெரிக்க அரசு அதை “ஆஹாவென்றுஎழுந்தது பார் யுகப்புரட்சி” என்று வரவேற்றது. ஜனநாயகத்தை உருவாக்குவதற்கும் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் நடக்கும் இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் தன் ஆதரவு உண்டு என்று அறிவித்தது. இப்போது போராட்டம் அமெரிக்காவிலேயே ஆரம்பமாகிவிட்டது. ஒரே ஒரு …

சூரிய கதிர் கேள்வி பதில் 1.11.2011

குமாரவேலன், திருச்செந்தூர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளதே? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டபிறகு , குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை அழிப்பார்கள், கலைப்பார்கள் என்ற சந்தேகம் வலுவாக …

நான் யார்

பிறந்த ஊர் 4-1-1954ல் நான் பிறந்தது சென்னையிலிருந்து 56 கிலோமீட்டர் அருகில் உள்ள செங்கற்பட்டில் ஒரு சிறிய அரசு மருத்துவமனையில். பெற்றோர் அப்பா வேம்புசாமி சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் (1907-1997). என் அம்மா பங்காரு அப்பாவின் துணைவி. அப்பாவின் மனைவி ஜெயலட்சுமி, அவரது குழந்தைகளான என் மூன்று அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தங்கை, …

சின்னத் திரை

சின்னத் திரை என் முதல் சின்னத் திரைப் படம் அணு சக்திக்கு எதிரான பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 34. 1988-89ல் கூடன்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக நானும் அப்போது அன்றாடம் தவறாமல் என்னை வீட்டில் சந்திக்கும் நண்பராக இருந்த நாகார்ஜுனனும், எழுதுவது, கூட்டங்கள் பேசுவது என்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். பெண்கள் …

கட்டுரைகள்

கேள்விகள் ஓய்வதில்லை….

கலைஞர் கருணாநிதி டெல்லிக்குச் சென்று திரும்பிய மறு நாளே டெல்லியில் ஆ.ராசாவை சி.பி.ஐ கைது செய்தது பற்றி பல வதந்திகள் உலவுகின்றன. கருணாநிதியிடம் முன்கூட்டியே காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல் சொல்லித்தான் ராசாவைக் கைது செய்தார்கள் என்றும் ராசாவுக்கும் முன்கூட்டியே கைதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும்படி கட்சித்தலைமை சொல்லி வைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இது உண்மையென்றால், சில கேள்விகள் எழுகின்றன. ராசாவை மட்டும் கைது செய்யுங்கள். தொடர்புடைய என் குடும்ப உறுப்பினர்களை தொடவேண்டாம். ராசாவுக்கு நான் சமாதானம் சொல்லிக் கொள்ளுகிறேன். தா.கிருஷ்ணன் வழக்கு, மதுரை தினகரன் ஊழியர் எரிப்பு வழக்கு, ஜயேந்திரர் வழக்கு, அவ்வளவு ஏன், சர்க்காரியா கமிஷன் வழக்குகள் எல்லாவற்றையும் நீர்க்கச் செய்தது போல இதையும் காலப் போக்கில் காலாவதியாக்கிவிடலாம் என்று காங்கிரசுடன் பேரம் பேசப்பட்டதா? அல்லது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய காங்கிரஸ் பிரமுகர்களை நாங்கள் காட்டிக் கொடுக்காமல் இருக்க வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்துக்காக என்ன கண்துடைப்புக் கைது வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்; அதற்கு மேல் எதுவும் செய்யாதீர்கள் என்று அரை மிரட்டல், அரை கெஞ்சல் பேரம் நடந்ததா?

கருணாநிதிக்கு ராசாவின் கைது முன்கூட்டித் தெரியாது என்று வைத்துக் கொண்டாலும், சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ராசா தவறு செய்யவில்லை என்று நமக்கெல்லாம் உறுதியாக அறிவிக்கும் தி.மு.கவால் ஏன் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருக்கும் சி.பி.ஐயை அதையே நம்பவைக்க முடியவில்லை ? கைதுக்குப் பிறகும் காங்கிரசுடன் தி.மு.க உறவை நீடிப்பது ஏன் ?

கைதுக்கு மறு நாள் நடந்த தி.மு.க பொதுக் குழுவில் கருணாநிதி சொல்கிறார்: நம்மையெல்லாம் ஓரளவு கலங்க வைத்திருக்கிறது. அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆர்வத்தைக் குறைக்கின்ற நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

இப்படிப் பேச ஆரம்பித்தவர், அடுத்து காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி பற்றிப் பேசுகையில் ” சிறிய விஷயங்களை ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய விஷயங்களைப் பெரிதுபடுத்திப் பகைமையாக்கிக் கொள்ளவேண்டாம்” என்று வேண்டுகிறார். மாலைப் பொதுக் கூட்டத்தில் மாவலி சக்ரவர்த்தி கதையை சொல்லி தன்னையும் ஏழைகளுக்கு சிறந்த சேவை செய்த ராசாவையும் மாவலியோடு ஒப்பிட்டுக் கொள்கிறார். இந்த மாவலிகளை வீழ்த்த சதி செய்பவர்கள் கருணாநிதியின் பார்வையில் உயர் சாதியினரும் மீடியாவுமாகத் தெரிகிறார்கள். அப்படியானால் அவர்களுடைய சதியை ஏற்று மாவலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விஷ்ணு யார் ? கொஞ்சம் இடம் கொடுத்ததும் தலையிலேயே காலை வைத்து அழுத்துவது காங்கிரஸ் ஆட்சிதானே ?

ஏழைகளுக்காகவே சேவை செய்தும் இப்படி இழிவுபடுத்தப்படுவது நமக்கு வழக்கமானதுதான் என்று அங்கலாய்க்கிறார் கருணாநிதி. இழிவுபடுத்துவது இப்போது யார் ? காங்கிரஸ்தானே ? அப்படியானால் இந்த இழிவு, கொடுமைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களோடு கூட்டணியில் இருந்தாக வேண்டிய கட்டாயம் என்ன?

தனக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் காங்கிரசிடம் சரணாகதி அ டைவது அவருக்குப் புதியதல்ல. 1976ல் நெருக்கடி நிலையின்போது அவர் ஆட்சியை காங்கிரஸ் டிஸ்மிஸ் செய்தது. அவரைத் தவிர அத்தனை தி.மு.க தலைவர்களையும் சிறையில் அடைத்தது. ஸ்டாலினை அடி உதையிலிருந்து காப்பாற்றப் போன சிட்டிபாபு சிறை அதிகாரிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். சிறைக் கொடுமையால், முரசொலி மாறனும் ஆற்காடு வீராசாமியும் நிரந்தரமான உடல் நலிவுக்காளானார்கள்.

ஆனால் அடுத்த நான்கே வருடங்களில் கருணாநிதி இந்திராவுடன் கூட்டு சேர்ந்தார். எம்.ஜி.ஆரை வீழ்த்துவது என்பது வெளியே சொல்லப்பட்ட நோக்கம். ( அது நடக்கவில்லை). இந்திரா கருணாநிதி அரசின் ஊழல்களை விசாரிக்க நியமித்த சர்க்காரியா கமிஷன் அம்பலப்படுத்திய ஊழல்கள் தொடர்பான வழக்குகளிலிருந்து தப்பிப்பதுதான் அசல் நோக்கம்.

இன்றைக்கும் காங்கிரசுடன் விடாப்பிடியாக அவர் கூட்டு சேர்ந்திருப்பதன் நோக்கம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவை பலி கொடுத்தாலும் சரி, தன் வீட்டுக்குள் சட்டத்தின் இரும்புக்கரம் நுழைதுவிடக்கூடாது என்ற பயம்தான்.

ராசாவுக்கு டெலிகாம் பொறுப்பை வாங்கித்தருவதில் கனிமொழி ஆற்றிய பங்கு நீரா ராடியா டேப்களில் தெளிவாகப் புலப்படுகிறது. எதெதற்கோ தீர்மானம் நிறைவேற்றிய தி.மு.க பொதுக் குழு, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கனிமொழி, ராசா, அழகிரி, பூங்கோதை, ராசாத்தி அம்மாள், தயாநிதி மாறன் என்று பலரும் பேசப்படும் நீரா ராடியா டேப்கள் பற்றி கட்சி என்ன கருதுகிறது என்று ஒரு வரி கூட சொல்லவில்லை.

தேர்தலில் ஒன்றுபட்ட தோற்றம் காட்டவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் வேண்டாவெறுப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மேலெழுந்தவாரியாகப் பேசுகிறார். ஆனால் இதுவரை ராசாவுக்கு முன் டெலிகாம் பொறுப்பு வகித்த தயாநிதி மாறன் பகிரங்கமாக ராசாவை ஆதரித்து எதுவும் பேசவில்லை.

நீரா ராடியா டேப்பில் ராசாவுக்கும் நீராவுக்கும் இடையே நடந்ததாக ஓர் உரையடலில் சொல்லப்படுகிறது.:

ராசா: ஒரே பிரச்சினை, தயாநிதி மாறன் எனக்கெதிராக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கிவிடலாம். அதை நாம் சமாளிக்க வேண்டும். பத்திரிகைகளில் அவர் சொல்வார், திரும்பவும் ஸ்பெக்ட்ரம் கறை படிந்த மந்திரி வருகிறார் என்பார்.

நீரா: அதை நாம் சமாளிக்கலாம். கவலை வேண்டாம்.

ஆக, ராசாவுக்கு எதிராக, ஏழைப் பங்காளன் நவீன மாவலிக்கு எதிராக கறை படிந்த மந்திரி என்ற பிரசாரத்தை 2009லேயே நடத்திய ‘உயர் சாதி மீடியா சதி கும்பலில்’ ஒருவர் தி.மு.கவிலேயே இருப்பவர்தான் என்று அல்லவா ஆகிறது ? ஏன் இப்போதும் தயாநிதி மாறன் ராசாவை ஆதரித்து எதுவும் பேசுவதில்லை ?

மாறன்களுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் தகராறு இருந்த சமயத்தில்தான் கலைஞர் டி.வி தொடங்கப்பட்டது. கலைஞர் டி.வியின் பிரதான உரிமையாளர்கள், தயாளு அம்மாளுவும் கனிமொழியும் ஆவர்.

அந்த டி.விக்கு அப்போது 214 கோடி ரூபாய்கள் ‘கடன்’ கொடுத்து உதவியது ராசாவின் ‘கொள்கை’ முடிவுகளால் பயனடைந்து டெலிகாம் லைசன்ஸ் பெற்ற கம்பெனிகளில் ஒன்றாகும் என செய்திகள் வெளியாகின. ஒரு சில மறுப்புகளும் வெளியாகியுள்ளன.

இவற்றிலெல்லாம் உண்மை வெளிவரவேண்டுமானால், சி.பி.ஐ ராசாவை கைது செய்து விசாரித்தது மட்டும் நிச்சயம் போதாது. சி.ஐ.டி காலனி வீட்டுக்குள்ளும் நுழைந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. விசாரணை முடிவில் குற்றவாளி என்றால் நடவடிக்கை எடுப்போம் என்று ராசா விஷயத்தில் சொல்லும் கருணாநிதியால் ஏன் இதுவரை நீரா ராடியா டேப்பில் வெளியான விஷயங்கள் பற்றியும் அதே போல சொல்லித் தன் குடும்ப உறுப்பினர்களும் விசாரணையை சந்திக்கத் தயார் என்று அறிவிக்க முடியவில்லை ?

காங்கிரசுடன் அவர் இப்போது விடாப்பிடியாகக் கூட்டணி வைத்திருப்பது , ஜெயலலிதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க மட்டும் அல்ல; சி.பி.ஐயை சி.ஐ.டி காலனி வீட்டுக்கு வர விடாமல் தடுக்கவும்தான், அல்லவா?

கேள்விகள் ஓய்வதில்லை. ஒவ்வொரு பதிலும் புதுக் கேள்வியை உற்பத்தி செய்கிறது.

இந்த வார திட்டு:

உடல்நலம் சரியில்லை என்று சொல்லி சட்டமன்றக் கூட்டத்துக்கு வராமல் இருக்க அனுமதி கோரியதற்காக ஜெயலலிதாவுக்கு இ.வா.தி. தேர்தல் முடியும்வரை அவர் ஏதாவது காரணம் சொல்லி சட்டமன்றத்துக்கு வரப் போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

இன்னொரு ஸ்பெக்ட்ரம் ஊழல் ?

இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.எஸ்.ஆர் ஓ , தனியார் கம்பெனியான தேவாஸ் மல்டிமீடியாவுடன் போட்டுள்ல ஒப்பந்தப்படி அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும் என்று புது ஊழல் வெளிவந்திருக்கிறது. இழப்பு 100 கோடியா லட்சம் கோடியா என்று அறிவுஜீவிகள் மோதிக் கொள்வார்கள். அசல் பிரச்சினை கவனம் பெறாமல் போய்விடும்.

அசல் பிரச்சினை என்ன? அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் கம்பெனிக்கு வெறும் 20 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை தரும்போது சுமார் 12 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டது. ஆனால் வெளி நாட்டு கம்பெனிகள் பெருமளவு பங்குகளை வைத்திருக்கும் தேவாசுக்கு 70 மெகாஹெர்ட்ஸ் ஒதுக்கீடுக்கு 1150 கோடி ரூபாய்தான் கட்டணம். இது ஏன் ?

தேவாஸ் பயன்படுத்துவதற்காக 2000 கோடி ரூபாய் செலவில் இரு செயற்கைக் கோள்களை ஐ.எஸ் ஆர்.ஓ ஏவ ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இதற்காக தேவாஸ் தரும் தொகை வெறும் 174 கோடி ரூபாய்தான். இது ஏன் ?

ஒப்ப்ந்தத்தை மறு பரீசிலனை செய்துவருவதாக ஐ.எஸ் ஆர்.ஓ அறிவித்திருக்கிறது. பழைய தலைவர் மாதவன் நாயர் காலத்தில் போட்ட ஒப்பந்தத்தை இன்றைய தலைவர் ராதாகிருஷ்ணன் கேள்வி கேட்டுள்ளார். இப்போது தணிக்கை அதிகாரிகளின் தணிக்கை நடப்பதால் விவகாரம் வெளிவந்தது. வராமல் இருந்திருந்தால் ஒப்பந்தம் அப்படியே நிறைவேறியிருக்கும் இல்லையா?

தேவாசின் தலைவர் சந்திரசேகர் முன்பு ஐ.எஸ்.ஆர்.ஓவின் அறிவியல் செயலர் பதவி வகித்தவர். உயர் அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றதும் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பழைய முதலாளியான அரசு நிறுவனத்தை ஏய்க்க உதவுவது வழக்கமாகி வருகிறது. இதற்கு தடை விதித்தால் என்ன ?

கல்கி 12-2-2011

திருப்பூரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் ?

முதலில் இந்த வார…இல்லையில்லை இந்த பத்தாண்டுகளுக்கான பூச்செண்டை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோருக்கு அறிவித்துவிடுகிறேன்.

கடந்த இருபதாண்டுகளாக நொய்யல் ஆற்றை சாயக்கழிவுகளால் கெடுத்து நாசமாக்கி, லட்சக்கணக்கான விவசாய நிலங்களையும் விவசாயிகள் வாழ்க்கையையும் வீணாக்கிய திருப்பூர் சாயப்பட்டறைகளை உடனடியாக மூடிவிட்டு, ஒவ்வொரு பட்டறையும் ஒரு சொட்டுக் கழிவையும் வெளியில் அனுப்பாத நிலையை அடைந்தபின்னரே திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

அது மட்டுமல்ல. சீரோ டிஸ்சார்ஜ் என்று சொல்லிக் கொண்டு சூழலை இதுவரை மாசுபடுத்தி வந்த பட்டறைகளை இத்தனை வருடம் அனுமதித்த தமிழக அரசின் மாசுக் ‘கட்டுப்பாட்டு’ வாரியத்தின் அதிகாரிகள் பட்டியலைத் தயாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க்வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இதற்கெதிராக மறு பரிசீலனை மனு போடுவோம் என்று வாரியம் சொல்லியிருப்பது வெட்கக்கேடானது.

இது தேர்தல் நேரமென்பதால், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறையில் நீர்த்துப் போகச் செய்து சாயப்பட்டறை அதிபர்களை சந்தோஷப்படுத்தும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் இறங்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே ‘சூழலைக் கெடுத்தவன்தான் இழப்பீட்டைக் கொடுக்க வேண்டும்’ என்ற தெளிவான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக, தமிழக அரசு பொது மக்களின் வரிப்பணத்தை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தியவர்களுக்கு மான்யமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 320 கோடி ரூபாய் மக்கள் பணத்தை அளித்திருக்கிறது. இது போதாது, இன்னும் வேண்டும் என்று நதி முழுங்கி சாயக்காரர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆற்றை மட்டுமல்ல, கடலையும் கெடுப்போம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.( கல்கி நவம்பர் 2010 ஓ பக்கங்கள்)

உடனடியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்; உற்பத்தி பாதிக்கப்படும்; அந்நியச் செலாவணி சம்பாதிப்பது பாதிக்கப்படும் என்ற கூக்கூரல்களை எழுப்பி நீதி மன்ற உத்தரவை நீர்க்கச் செய்யும் வேலைகளில் தொழிலதிபர்கள் இறங்குவார்கள். இந்த மிரட்டல்களுக்கு மக்களோ அரசோ அடிபணியக் கூடாது. தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி பூச்சாண்டி காட்டி ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயக் கூலிகளையும் விவசாயிகளையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் இவர்கள். திருப்பூரில் கோடி கோடியாக சம்பாதித்தாலும், விவசாயத்தை சாகடித்துவிட்டு, டைனிங் டேபிளில் தட்டில் சாயப் பட்டறையின் சோடா உப்பையும் குளோரைடையும் பரிமாறினால் உணவாக யாரும் சாப்பிடமுடியாது. நெல்லும் பருப்பும் உற்பத்தி செய்தே ஆகவேண்டும்.

நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோரின் உத்தரவில் உள்ள முதல் முக்கியமான அம்சம் பற்றி கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். ஒரு சொட்டு கூடக் கழிவை வெளியேற்றாமல் சீரோ டிஸ்சார்ஜ் நிலையை சாதித்தால் மட்டுமே ஒரு சாயப்பட்டறையை திரும்பவும் இயங்க அனுமதிக்கலாம் என்பதே நீதிபதிகளின் உத்தரவு.

இப்போதுள்ள சுத்திகரிப்பு நிலையங்களால் சீரோ டிஸ்சார்ஜ் நிலையை எட்டவைக்க முடியவே முடியாது என்பதே அறிவியல்படியான உண்மை நிலை.சாயக் கழிவுகளில் வரும் நீரை மட்டுமே இவை சுத்தப்படுத்துகின்றன. ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் ஆர்.ஓ நிலையங்கள் இவை. நீரை எடுத்த பிறகு திடக் கழிவுகளை சாக்குப் பைகளில் கட்டி, பட்டறை வளாகத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அப்படித்தான் வைத்து வருகிறார்கள்.சோடா உப்பு, குளோரைடுகள், இதர ரசாயனங்களின் திடக்கழிவுகள் இவை.

ஆர்.ஓ முறையில் பயன்படுத்தும் சவ்வுகள் இரு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காதவை. உண்மையில் இவை கடல் நீரில் இருக்கும் உப்பை அகற்றி நல்ல நீராக்கும் வேலைக்கே சாலச் சிறந்தவை. துணிகளுக்கு சாயம் போடும் பட்டறைகளில், துணியை வெளுப்பதிலிருந்து ( பிளீச்சிங்), வண்ணம் ஏற்றுவது வரைப் பயன்படுத்தும் பல்வேறு ரசாயனங்களுக்கு உகந்தவையே அல்ல.

இது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பட்டறை அதிபர்களுக்கும் தெரியாதது அல்ல. அதனால்தான் புத்திசாலித்தனமாக நீதிமன்றம் முன்பு வைக்கும் ஆவணங்களில் தொடங்கி, எல்லா இடத்திலும் சீரோ டிஸ்சார்ஜ் என்று சொல்லாமல் சீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது திரவக் கழிவு மட்டும் நிறுத்தப்படும். திடக்கழிவு ? கோணிப் பையில் கட்டிக் கட்டி வாரிசுகளுக்கு சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.

அப்படியானால் திடக்கழிவையும் வெளிவிடாமல் சுத்திகரிக்கும் முறை இல்லையா? இருக்கிறது என்று தமிழகத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானியே பைலட் ப்ளாண்ட் வைத்து செய்து காட்டியிருக்கிறார். தற்போது 77 வயதாகும் டாக்டர் எஸ்.ஆர்.ராமசாமி அமெரிக்காவில் விஞ்ஞான தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார். தன் உருவாக்கங்களுக்காக ஐந்து அமெரிக்க காப்புரிமைகள் ( பேடண்ட்டுகள்) பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கரக்பூர் ஐ.ஐ.டி, லூயிவில்லி பல்கலைக்கழகம், லண்டன் பலகலைக்கழகங்களிலெல்லாம் படித்தவர்.

நேரடி ஆவியாக்கும் முறைப்படி இவர் உருவாக்கியிருக்கும் சுத்திகரிப்பு முறையில் திரவக்கழிவு சுத்தமாகி நல்ல தண்ணீராக்கப்படுகிறது. திடக்கழிவுகளில் இருந்து வண்ணமும், மாசுகளும் நீக்கப்பட்டு, சோடா உப்பும், குளோரைடுகளும் மறுபடியும் பயன்படுத்தத் தயாரான நிலையில் மீட்டெடுக்கப்படுகின்றன.

ஒரு சோதனை ஓட்டமாக, கோவை வசுந்தரா, கரூர் கே.பி.ரங்கசாமி ஆகிய தொழில் முனைவர்களின் ஏற்பாட்டில், திருப்பூர் அருகே சுல்தான்பேட்டையில் ஒரு சாயப்பட்டறையில் இந்த நேரடி ஆவியாக்கல் முறை சுத்திகரிப்பை விஞ்ஞானி ராமசாமி செய்து காட்டினார். வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த முயற்சியில் தினசரி 10 ஆயிரம் லிட்டர் கழிவு சுத்திகரிக்கப்பட்டது.

இதை நிர்மாணிப்பதற்கு ஆகக்கூடிய செலவு சுமார் 80 லட்சம். ஆனால் இதுவரை போடப்பட்டிருக்கும் ஆர்.ஓ சுத்திகரிப்பு முறையில் இல்லாத ஒரு பெரும் லாபம் இதில் உள்ளது என்று இந்த முனைவர்கள் தெரிவிக்கின்றனர். சோடா உப்பு, குளோரைடுகளை மீட்டெடுப்பதால், ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது. எனவே சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ போட்ட முதலீட்டை இரண்டே வருடங்களில் எடுத்துவிடலாம். அதன்பிறகு சுத்திகரிப்பினால் வருடத்துக்கு 40 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது !

ஆனால் ஏற்கனவே ஆர்.ஓ முறையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்துவிட்டிருந்தபடியால், மாற்று வழிகளில் அது அக்கறை காட்டவில்லை. தமிழகத்துக்கு வந்து இந்த முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ராமசாமியும் சோர்வுற்று திரும்ப அமெரிக்காவுக்குப் போய்விட்டார்.

இப்போது தெளிவான, கறாரான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்திருக்கும் நிலையில், இனி வெறுமே சீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் என்றில்லாமல் சீரோ ஆல் டிஸ்சார்ஜை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான தொழில்நுட்பத்தில் ஏன் மாசுக் கட்டுப்பாடு வாரியம் இதுவரை அக்கறை காட்டவில்லை என்று விசாரிக்க வேண்டும். இனி அக்கறை காட்டும்படி உத்தரவிடவேண்டும். தேவைப்பட்டால், நீதிமன்றமே ஓர் உயர்நுட்ப வல்லுநர் குழுவை நியமித்து எந்த தொழில்நுட்பம் உகந்தது என்று குறிப்பிட்ட காலத்துக்குள் பரிந்துரைக்கும்படி உத்தரவிடலாம். விஞ்ஞானி ராமசாமியின் தொழில்நுட்ப முறையை அரசோ, சாயப்பட்டறை உரிமையாளர்களின் சங்கமோ சோதனை ஓட்டமாக நிறுவி, மற்றவர்களுக்கு நம்பிக்கை வரச் செய்து காட்டலாம்.

இதுவரை இருந்த அரைகுறை சுத்திகரிப்பையே பல பட்டறைகள் செய்யாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன. இனி சுத்திகரிப்பை செய்யத் தொடங்கினால் பழைய தவறுக்கு தண்டனை இல்லாமல் அவர்களை அனுமதித்துவிடலாம் என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். அவர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து அந்த அபராதத்தொகைகள் நொய்யல் மாசினால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு செலவிடப்படவேண்டும்.

எப்படியானாலும் இந்த முறை சீரோ ஆல் டிஸ்சார்ஜ் இல்லாமல் மறுபடியும் சாயப்பட்டறைகளை இயங்க அனுமதிக்கவே கூடாது. ராமேஸ்வரம் மீனவர்களை சிங்களப் படைகள் கொல்கின்றன. தமிழ் விவசாயிகளை தமிழ் தொழிலதிபர்களே சித்ரவதை செய்து கொன்றுகொண்டிருப்பதும் கூடவே நிறுத்தப்படவேண்டும். நம் சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் பணம் சம்பாதிக்கும் மன நிலை வந்தால்தான் உண்ஐயில் திருப்பூரைக் காப்பாற்றமுடியும். இல்லாவிட்டால் ஒரு பக்கம் பண மூட்டையும் மறுபக்கம் திடக்கழிவு மூட்டையுமாக அழிவோம்.

இந்த வார நகைச்சுவை:

கருணாநிதி ( டெல்லியில்):தி.மு.க கூட்டணியில் பா.ம.க உள்ளது.

ராமதாஸ் ( சென்னையில்): அது பற்றி இன்னும் நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

கருணாநிதி:(டெல்லியில்) அப்படியானால், நாங்களும் அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்த வார பூச்செண்டு:

சபரிமலையில் மகரவிளக்கு மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று பகுத்தறிவாளர்கள் நீண்ட காலமாக சொல்லி வருவது உண்மைதான் என்று அறிவித்திருப்பதற்காக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு இ.வா.பூ.

இந்த வார கேள்வி:

டெலிகாம் ஊழலுக்காக ஆ.ராசாவை கைது செய்திருக்கும் சி.பி.ஐ, ராசாவுக்கு டெலிகாம் இலாகாதான் கிடைக்க வேண்டும் என்பதற்காக லாபி செய்தவர்களையும் ராசாவுக்கு அந்தத் துறைதான் தரவேண்டும் என்று அடம் பிடித்த கட்சித்தலைமையையும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன் ? ஊழல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கு லாபியிங்கே ஓர் ஆதாரமில்லையா?

இந்த வார சந்தேகம்:

ஒருவர் மீதான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, குறிப்பிட்ட ஊரில் மட்டுமே தங்கியிருந்து தினசரி காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திடவேண்டுமென்ற நடைமுறை நம் ஊரில் இருக்கிறது. இப்படி ஒருவரை அலைக்கழிக்காமல் அவரை சுதந்திரமாக நடமாடவிட்டுவிட்டு, அவர் எங்கிருக்கிறார் என்பதை அதிகாரிகள் தெரிந்துகொள்ள நவீன தொழில்நுட்பமான ரேடியோ காலரை அவரிடம் பொருத்திப் பயன்படுத்தும் அமெரிக்கா செய்வதை மட்டும் தவறு என்று ஏன் சொல்ல வேண்டும் ?

கல்கி 5.2.2011

இரண்டு குடும்பக் கவலைகள்

தலைப்புக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை. சாதாரண மனிதர்களாகிய நம் எல்லார் குடும்பங்களும் கவலைப்பட வேண்டிய இரு கவலைகள் பற்றி இந்த வாரம்.

கவலை 1:

என் இளம் நண்பர்கள் தமக்குக் குழந்தை பிறந்ததைச் சொன்னதும் நான் வாழ்த்து சொல்லிவிட்டு அடுத்து மறக்காமல் குழந்தையின் தாயிடம் வற்புறுத்திச் சொல்லும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். குறைந்தது ஒரு வருட காலத்துக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது அவசியம். நேரில் சென்று குழந்தையைப் பார்க்கும் தருணங்களில், தாய்க்கு பரிசாக தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் கால்ஷியம் மாத்திரைகளைப் பரிசாகத் தருவதை ஒரு காலத்தில் பின்பற்றி வந்தேன்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு ஆயுட்காலம் முழுமைக்குமாகத் தரக்கூடிய ஒரே பரிசு தாய்ப் பால்தான். நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைக்கு ஏற்படுத்தித் தர அதை விட சிறந்த வேறொன்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் தாய்ப்பால் தருவதை ஒரு சில வாரங்களிலோ மாதங்களிலோ நிறுத்திவிடும் அவல நிலையைப் பல குடும்பங்களில் அடிக்கடி பார்க்கிறேன். எய்ட்ஸ், பால் ஒவ்வாமை போன்ற தீவிரமான மருத்துவ காரணங்கள் அபூர்வமானவை. மற்றபடி சொல்லப்படும் சமாதானங்கள் அர்த்தமற்றவை. அதில் முக்கியமானது பால் சுரக்கவில்லை என்பது. குழந்தை குடிக்கக் குடிக்கத்தான் பால் சுரக்கும். தாய் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால்தான் பால் சுரக்கும். இளம் தாய்க்கு மகிழ்ச்சியான மனநிலையும், குறைவான வேலை பளுவும் இருப்பது அவசியம்.

குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் – கணவன், மாமனார், மாமியார், இன்னும் ஒரே கூரையின் கீழ் இருக்கக்கூடிய இதர சொந்தங்கள் எல்லாரும் ஒத்துழைத்தால்தான் ஒரு பெண் நிம்மதியாகக் குழந்தைக்கு தாய்ப்பால் தரமுடியும். வெளி வேலைக்குப் போகக்கூடிய பெண்களுக்கு அலுவலகத்தில் குழந்தைக் காப்பகங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் எல்லாம் அக்கறை காட்டாத சமூகம், கடைசியில் நோயாளிகள் நிறைந்த சமூகமாகத்தான் முடியும்.

தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு தடங்கலின்றிக் கிடைப்பதற்கு பெரிய எதிரியாக இருப்பது பேபி ஃபுட் எனப்படும் பால் பவுடர் சமாச்சாரங்கள்தான். எளிதில் கலக்கி புட்டியில் கொடுத்துவிடும் வசதிக்காக இதை குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே சிலர் ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தைக்கு பேபி ஃபுட்டின் சுவை கிடைத்துவிட்டால், தாய்ப்பால் பிடிக்காமல் போய்விடும். அறுபதுகள் முதல் எழுபதுகள், எண்பதுகள் வரை பல மருத்துவர்கள், கொழு கொழு குழந்தை தேவை என்ற பெற்றோரின் ஆசையைப் பயன்படுத்தும் பேபி ஃபுட் நிறுவனங்களின் ஏஜண்ட்டுகளாகவே வேலை பார்த்தார்கள். இது தவறு என்ற விழிப்பு உணர்ச்சி மருத்துவத்துறையில் இன்று ஆழமாக பதிந்திருக்கிறது.

ஆனால் பேபி ஃபுட் கம்பெனிகள் இன்றும் பல விதங்களில் தாய்ப்பாலுடன் போட்டி போட்டு அதை முறியடிக்க முயன்றுகொண்டே இருக்கின்றன. அவை தம் விளம்பரங்களில் தாய்ப்பாலுக்கு நிகரானது என்றோ, தாய்ப்பாலின் அத்தனை நலங்களும் அடங்கியது என்றோ சொல்வது துளிக் கூட உண்மையல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். தாய்ப்பாலுக்கு நிகரான எதுவும் இன்னும் மனிதனால் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நான்கு இந்திய பல்கலைக்கழகங்களுடன் பேபி ஃபுட் தயாரிக்கும் நெஸ்லே கம்பெனி போட்டிருக்கும் ஒப்பந்தம் கவலை தருகிறது.

கிராமங்களில் இருக்கும் அரசாங்கப்பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவப் பெண்களுக்கு சத்துணவு பற்றிய அறிவைப் புகட்டுவதற்கான திட்டத்தை இந்த கம்பெனி பஞ்சாப் விவசாயப் பலக்லைக்கழகம், ஹரியானா பால் வள மேம்பாட்டு நிலையம், மைசூர் பல்கலைக்கழகம், உத்தரகண்ட் ஜி.பி.பந்த் விவசாயப் பல்கலைக்கழகம் ஆகிய பொது அமைப்புகளின் உதவியுடன் நிறைவேற்றும் என்பதே ஒப்பந்தம். அடுத்த சில வருடங்களில் தாய்மையை அடையும் வாய்ப்பில் இருக்கும் இளம் பெண்களை முன்கூட்டியே வசப்படுத்தி பிரசாரம் செய்வதே அசல் நோக்கமாக இருக்க முடியும்.

ஏனென்றால் சத்துணவு பற்றிய விழிப்புணர்வு வகுப்பில் என்ன சொல்லித்தரப் போகிறீர்களென்று கேட்டால், அந்த விவரங்களைத் தர கம்பெனியும் பல்கலைக்கழகங்ககளும் மறுத்துள்ளன. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் , பள்ளிச் சிறுமிகளுக்கு நடத்தப் போகும் வகுப்புகள் பற்றிய விவரங்களைத்தரும்படி பஞ்சாப் பல்கலைக்கழகத்தை , இந்திய தாய்ப்பால் ஊக்குவிப்பு கூட்டமைப்பு கோரியது. விவரங்களைத் தெரிவிக்கலாமா என்று பல்கலைக்கழகம் நெஸ்லே கம்பெனியின் அனுமதி கேட்டது. அது அனுமதி மறுத்துவிட்டது. ஒப்பந்த விவரங்கள் ரகசியமானவை; அவற்றை வெளியிடமுடியாது என்று பல்கலைக்கழகமும் பதில் சொல்லிவிட்டது. நெஸ்லே கம்பெனியின் அதிகாரிகள், பல்கலைக்கழகத்துக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் சத்துணவு திட்டம் பற்றிய விவரங்களை வெளியிட்டால் தங்கள் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படும் என்றும் போட்டியாளர்களுக்கு சாதகம் ஏற்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். பள்ளிச் சிறுமிகளுக்கு ஊட்டச்சத்து பற்றி வகுப்பு எடுப்பதில் கம்பெனியின் வர்த்தக நலன் எங்கே வருகிறது ?

இந்த திட்டத்துக்காக பல்கலைக் கழகத்துக்கு கம்பெனி தரும் பணம் வெறும் இரண்டரை லட்சம் ரூபாய். ஆனால் தொலை நோக்கில் இதன் விளைவுகள் ஆபத்தானவை. கிராமப்புறங்களில் தாய்ப்பால் பழக்கத்தை குறைத்தால்தான் பேபிஃபுட் விற்பனையை அங்கே அதிகரிக்கமுடியும் என்ற வர்த்தக நோக்கத்துக்காக, சமூக அக்கறை , விழிப்புணர்வு என்ற புதிய ரூட்டுகளை கம்பெனிகள் பயன்படுத்த அனுமதிப்பது மிக மிக ஆபத்தானது.

கவலை 2:

இது நம் வீடுகளில் பயன்படுத்தும் காய்கறிகள், கனிகள் பற்றிய கவலை. அவற்றின் விலை உயர்வதைப் பற்றியல்ல. எவ்வளவு மலிவான விலைக்கு விற்றாலும் சரி, நாம் வாங்குவது காய்கனியா,விஷமா என்ற பிரச்சினையைப் பற்றியது இந்தக் கவலை.

டெல்லியைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் என்ற நுகர்வோர் நல அமைப்பு நாடு முழுவதும் விற்கப்படும் காய்கள், பழங்களில் மாதிரிகளை எடுத்து பரிசோதித்தது.

சோதனை முடிவுகள் பயங்கரமாக இருந்தன. இந்தியாவில் எப்போதோ தடைசெய்யப்பட்ட பூச்சி மருந்துகளின் எச்சங்கள் எல்லாம் பல காய், கனிகளில் இருந்தன. அதாவது இந்த பூச்சிக் கொல்லி விஷங்கள் இன்னமும் பயன்பாட்டில் இருந்துகொண்டிருப்பதை இது காட்டுகிறது.

பூச்சிக் கொல்லி விஷங்களின் எச்சம் எந்த அளவு வரை இருந்தால் மனிதர்களுக்கு ஆபத்தில்லை என்று ஐரோப்பிய யூனியன் வரையறுத்திருக்கிறது. இந்தியாவில் சோதித்த காய் கனிகளில் அந்த அளவு ஐரோப்பாவில் அனுமதித்த அளவை விட 750 மடங்கு அதிகமாக இருக்கிறது. காலிபிளவர், வெண்டைக்காய், கத்தரிக்காய், பாகற்காய், கீரை, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், ஆப்பிள் ,திராட்சைஎன்று பலவற்றிலும் பூச்சி கொல்லி விஷக்கழிவின் அளவு அதிகமாகவே உள்ளது.

இதைல் பாரதியான்,,க்ளோர்டென், எண்ட்ரின், ஹெப்டகோர் முதலிய இந்த பூச்சிக் கொல்லி விஷ எச்சங்களை காய்கனிகளுடன் சேர்த்து நாம் உட்கொண்டால், நரம்பு நோய்கள்,தோல் நோய்கள், சிறுநீரக பாதிப்பு, புற்று நோய் போன்ற சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இது பற்றிய ஒரு பொது நல வழக்கை டெல்லி உயர் நீதி மன்றம் தற்போது விசாரித்து வருகிறது. அரசுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினைகளில் நம் கவனம் குவியாமல், மேலெழுந்தவாரியானவற்றில் ஆர்வம் காட்ட நம்மை திசை திருப்பும் வேலையை நம் அரசியல்வாதிகளும் மீடியாக்களும் செய்துவருகின்றன. பேபி பவுடர், பூச்சிமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பிரும்மாண்டமான பன்னாட்டு கம்பெனிகள் என்பதால் செய்திகளி தமக்கு சாதகமாக திரிக்கவும் மறைக்கவும் தங்கள் வணிக செல்வாக்கை அவற்றால் பயன்படுத்த முடிகிறது.

இப்போதைக்கு நமக்குள்ள உடண்டி தீர்வுகள்: ஒவ்வொரு குடும்பமும் தாய்ப்பால் கொடுப்பதில் பிடிவாதம் காட்டும் குடும்பமாக மாற வேண்டும். காய் கனிகளை நன்றாகக் கழுவிவிட்டு, தடித்த தோல்களை நீக்கிவிட்டு சாப்பிடுவதன் மூலம் பூச்சிக் கொல்லிக் கழிவின் விளைவுகளைக் குறைக்கலாம்.

தொலை நோக்குத் தீர்வு: இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளில் ஆர்வமுள்ள நேர்மையான அரசியல்வாதிகளையும் மீடியாவையும் நம் குடும்பங்களில் இருந்து உருவாக்க நாம்தான் பாடுபடவேண்டும்.

இந்த வாரப் பூச்செண்டு

சி.பி.ஐ ரெய்டுக்குள்ளான தமிழ் மையத்தின் ‘உதவியுடன்’ அரசு நடத்திய சங்கமம் விழாவில் கூச்சமின்றி மூத்த எழுத்தாளர்கள், படைப்பாளிகள் எல்லாம் பங்கேற்றபோது, தனக்கு வந்த அழைப்பை தார்மிக அடிப்படையில் நிராகரித்து அறிக்கை வெளியிட்ட இளம் கவிஞர் வா.மணிகண்டனுக்கு இ.வா.பூ

இந்த வாரத் திட்டு

கறுப்புப் பணத்தை ஸ்விஸ் முதலிய வெளி நாட்டு வங்கிகளில் வைத்திருப்போர் பெயர்களை இந்திய அரசுக்குத் தெரிந்தாலும் வெளியிட மறுக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இ.வா.தி.

இந்த வார மகிழ்ச்சி

தலைவர் பதவியா, முதலமைச்சர் பதவியா எதில் மகிழ்ச்சி என்றால் தலைவர் என்பதில்தான் என்ற முடிவை விரைவில் எடுப்பேன் என்று முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பது இ.வா.ம. இதைச் செய்யும்படி சுமார் நான்கு வருடங்கள் முன்பே நான் சொன்னபோது கேட்டிருந்தால், ஸ்பெக்ட்ரம் தலைவலிகள் எல்லாம் வராமல் தப்பித்திருக்கலாம்.

இந்த வாரத் தகவல்

2009ல் ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் அலட்சியத்தைக் கண்டித்து தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்த அன்று கனிமொழி செய்த மற்றொரு காரியம் என்ன தெரியுமா? நீரா ராடியாவிடம் யாருக்கு எந்த இலாகா என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.

கல்கி 29.1.2011

மூன்றெழுத்து…..!

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்” என்று ஒரு பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல் இருக்கிறது. அந்த மூன்றெழுத்து குறிப்பது தி.மு.கவை என்று அப்போது பலர் கருதினார்கள். ஆனால் அப்படி பகிரஙகமாக அரசியல் பாட, தணிக்கைக் குழு அனுமதிக்காது என்பதால்தான், அதை ‘கடமை’ என்ற மூன்றெழுத்து என்று பாடலாசிரியர் சாமர்த்தியமாக மாற்றி எழுதினார் என்றும் சொல்வார்கள்.

தமிழர் மனதை ஆக்ரமிக்கும் மூன்று மூன்றெழுத்து விஷயங்களைப் பற்றி சென்னைப் புத்தகக் கண்காட்சியில், என் அரங்கில் நடத்திய தினசரி கருத்துக் கணிப்பு தேர்தலில் மக்கள் கருத்தைக் கேட்டிருந்தோம்.

தமிழ்நாட்டை அலைக்கழிக்கும் மூன்று மூன்றெழுத்து விஷயங்களில் முதன்மையானது இன்று , ‘செக்ஸ்’ என்றே எனக்குத் தோன்றுகிறது. காலை தினசரிகளில் ‘கள்ளக் காதல்’ செய்திகள் வராத நாளே இல்லை. பெரும்பாலான கொலை நிகழ்வுகள், திருமணத்துக்கு வெளியே இருக்கும் ஆண்-பெண் உறவுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஒரு முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக மனைவி, துணைவி இருவருடனும் நகர்வலம் வருவதைப் பார்க்கவும் முடியாது. பொது மக்கள் அதை சகஜமானதாக ஏற்றுக் கொண்டிருப்பதையும் காண முடியாது. திருமணத்துக்கு வெளியே ஏற்பட்ட இன்னொரு உறவை, திருமணத்துக்கு பாதிப்பு ஏற்படாமலும், கொலை போன்ற வன்முறைகளில் முடியாமலும், அமைதியான சமரசத்தின் மூலம் தீர்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் சாமர்த்தியம் தமிழர்களால் போற்றப்படுகிறது என்றே இதைப் புரிந்துகொள்கிறேன்.

பெருவாரியான தமிழர்களுக்கு அந்த திறமை இல்லை. அன்றாட செய்திகளில் காணும் கள்ளக் காதல் சார்ந்த சூழ்ச்சிக் கொலைகள், ஆண்-பெண் உறவு தமிழ்ச் சமூகத்தில் பெரும் சிக்கலாக இருப்பதையே உணர்த்துகின்றன.

காமம் சராசரி தமிழருக்கு புனிதமாக இல்லாவிட்டாலும் புதிராகவே இருக்கிறது. காதலும், ஆபாச அசைவுகளுடன் பாட்டு நடனக் காட்சிகளும் இல்லாமல் தமிழ்ப் படம் வருவதென்பது, ஸ்விஸ் வங்கிக் கணக்கு அம்பலமாவதைப் போல அபூர்வமாக இருக்கிறது. பொறுக்கிகள் கதாநாயகர்களாக ஆக்கப்படுவதை தமிழ் ரசிகர்கள் மனமொப்பி வரவேற்கிறார்கள். பெண் உடல் ஆணின் இச்சைக்கு என்றே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று சிறு வயதிலிருந்தே நம்பும் மனநிலையை தமிழ் சிறுவர்களின் திரை ரசனை ஊக்குவிக்கிறது. அரசியலிலும் செக்ஸ் சார்ந்த பிரயோகங்கள் தமிழகத்தைப் போல வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. திருமதியா, திருமதி இல்லையா என்ற சர்ச்சையை இங்கு மட்டுமே பார்க்க முடியும்.

கிராமங்களில் பணி புரியும் பல தொண்டு நிறுவனங்களின் அனுபவங்களிலிருந்து பார்த்தால், படிப்பறிவற்ற ஏழைச் சிறுமி ஒருத்தி உடல் வேட்கையால் திருமணத்துக்கு முன்பே கருவுற்று அதைக் கலைக்கும் சிக்கலுக்கு ஆளாகும் ஆபத்து கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்தே வந்திருக்கிறது. நகரங்களில் தடுப்பு முறைகள் பற்றிய அறிவு கூடுதலாக இருப்பதால், அத்தகைய சிக்கல்கள் இல்லை எனினும், ஆண்-பெண் உறவுகள் பற்றிய குழப்பம் விடலைப்பருவத்தினர் மத்தியில் கடுமையாகவே இருக்கிறது.

ஊடகங்களும் பத்திரிகைகளும் இவற்றைத் தணிப்பதற்கு பதில் கூட்டவே செய்கின்றன. எய்ட்ஸ் பிரசார ரயில் சென்னைக்கு வந்தபோது, சினிமா பகுதியில் ஆபாசப் படங்களையும் குறிப்புகளையும் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஒரு தினசரி, குடும்பத்துடன் போய் பார்க்க முடியாத ரயில் என்றும் அதில் இருக்கும் உடல் பாக படங்கள் ஆபாசமானவை என்றும் எழுதியது.

இப்படிப்பட்ட சூழலில் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தத்தம் உடல் வளர்ச்சி மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், உளச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும், ஆண்-பெண் உறவுகளை ஆரோக்கியமாக அணுகப் புரிந்துகொள்ளவும் தேவைப்படும் வாழ்க்கைக் கல்வி எனப்படும் செக்ஸ் கல்வி அவசியமாகிறது.

பள்ளிக் கூடத்தில் செக்ஸ் கல்வியை எந்த வகுப்பில் அறிமுகப்படுத்தலாம் என்று என் புத்தக அரங்கில் நடத்திய கருத்துக் கணிப்பு தேர்தலில் கேட்டோம். அப்படி ஒரு கல்வியே தேவையில்லை என்று வாக்களித்தவர்கள் வெறும் 4 சதவிகிதம்தான். 96 சதவிகிதம் பேர் கல்வி தேவை என்றே வாக்களித்திருக்கிறார்கள். அதில் 56 சதவிகிதம்பேர் எட்டாம் வகுப்பில் தொடங்கலாம் என்றும் 40 சதவிகிதம் பேர் ப்ளஸ் ஒன்னில் தொடங்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

பலருக்கும் இது ஆச்சரியத்தைத் தரக் கூடும் என்றாலும் எனக்கு இதில் ஆச்சரியமில்லை.ஏனென்றால் கடந்த சில வருடங்களாகவே பல பொது இடங்களில் என்னை சந்திக்கும் இளம் பெற்றோர்கள், இளைஞர்கள் பலரும் என்னிடம் என் அரசியல் கருத்துகளைப் பற்றிப் பேசுவதற்கு சமமாக நான் எழுதிய வாழ்க்கைக் கல்வி நூல்களைப் பற்றிப் பேசுகிறார்கள். சக இளைஞர்களுக்கு பரிசு தருவதாகவும் தங்கள் குழந்தைகளுக்கே பரிசாகத் தருவதாகவும் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். “எங்களால் பேசி புரியவைக்க முடியாததை எல்லாம் அந்தப் புத்தகம் மூலம் சொல்ல முடிகிறது” என்கிறார்கள். வாழ்க்கை/செக்ஸ் கல்விக்கான தேவை நம் சமூகத்தில் கடுமையாக இருப்பதையே அந்த உரையாடல்களும் இந்த புத்தகத் திருவிழா கருத்துக் கணிப்பும் உணர்த்துகின்றன.

தமிழர்களின் உயிர் இருக்கும் இன்னொரு மூன்றெழுத்து – சினிமா.

நடிகனின் பட அட்டை மீது குடம் குடமாகப் பாலைக் கொட்டி ஆராதிக்கும் முட்டாள்களை இங்கேதான் அதிகமாகப் பார்க்க முடியும். அடுத்த முதலமைச்சரை தன் தெருவில் தன் ஊரில் தேடிக் கண்டுபிடிக்காமல், கொட்டகைத் திரையில் தேடுபவர்களும் இங்கேதான் அதிகம்.

அண்மைக் காலமாக தமிழ் சினிமாவில் காமத்தை மீறும் விதத்தில் வன்முறை அதீத இடம் பெற்றுவருகிறது. காதலே வன்முறையாகத்தான் படங்களில் நடக்கிறது. அது தவிர, ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லும் காட்சிகள் கொடூரமான முறையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. கொல்லுகிற விதம், அதில் இருக்கும் ‘புத்திசாலித்தனம்’, கொல்லப்படும்போது உடல் உறுப்புகள் சிதைக்கப்படும் முறை எல்லாம் விவரமாகக் காட்டப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், திரைப்படங்களில் வரும் வன்முறைக் காட்சிகள் இளம் மனங்களை பாதிக்கின்றனவா, இல்லையா என்று கருத்துக் கணிப்பு தேர்தலில் ஒரு நாள் கேட்டோம். பாதிக்கின்றன என்று சொன்னவர்கள் 79 சதவிகிதம் பேர். நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதால் பாதிக்காது என்றவர்கள் 16 சதவிகிதம் பேர்.பாதிக்குமா, பாதிக்காதா என்று தெரியவில்லை என்றவர்கள் 5 சதவிகிதம் பேர். எந்தப் பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் இயங்கும் சினிமாக்காரர்களும், அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தணிக்கைக் குழுவும் கவனிக்க வேண்டிய செய்தி இது.

தமிழர்களின் உயிர் உண்மையில் நமது மொழியான மூன்றெழுத்துச் சொல் – தமிழ் தான் !

ஆனால் கடந்த முப்பதாண்டுகளாக, பள்ளிக் கூடத்தில் தமிழ்வழிக் கல்வி ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் மட்டுமேயானது என்று ஆக்கப்பட்டிருக்கும் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. ஏழைகளும் தலித்துகளும் செல்லும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே தமிழில் எல்லாப் பாடங்களும் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் பெருவாரியானவற்றின் தரம் படுமோசமானது. பிரதாம் அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டில் மூன்றாம் வகுப்பு முடித்த குழந்தைகளில் முதல் வகுப்புப் பாடத்தைப் படிக்கத் தெரியாத குழந்தைகள் 70 சதவிகிதத்துக்கும் அதிகம். இதே போல மூன்றாம் வகுப்பில் கழித்தல் கணக்கு தெரியாத குழந்தைகளும் 70 சதவிகிதத்துக்கும் அதிகம். ஐந்தாம் வகுப்பில் இரண்டாம் வகுப்பு பாடத்தைப் படிக்கத் தெரியாத குழந்தைகள் 60 சதவிகிதத்துக்கும் அதிகம். வகுத்தல் கனக்கு தெரியாதவர்கள் 70 சதவிகிதம்.

பலரும் கொண்டாடும் அப்துல் கலாம் உட்பட அறுபதுகளுக்கு முன்னர் தமிழகப் பள்ளிகளில் படித்து சாதனை புரிந்திருக்கும் அனைவரும் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள்தான். ஆனால் அந்தக் குடும்பங்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் ஆங்கில மீடியத்துக்குப் போய்விட்டார்கள். மெல்ல தமிழ் மீடியம் என்பது ஏழைகளுக்கானது என்றாக்கப்பட்டுவிட்டது. ஆங்கிலம் நமக்குத் தேவைதான். ஆனால் ஒரு மொழியாக மட்டுமே தேவை. எல்லா பாடங்களையும் தாய் மொழியில் படித்தால்தான் பதியும் என்றும் அவை குறித்து சிந்திக்கும் ஆற்றல் பெருகும் என்றும் உலக அள்வில் பல அறிஞர்கள் சொல்லிவந்திருக்கிறார்கள்.

தமிழில் படித்தவர்களுக்கு 20 சத விகித அரசு வேலைகளை ஒதுக்கீடு செய்யப்போவதாக அண்மையில் தி.மு.க அரசு அறிவித்தது. இது நிச்சயம் வரவேற்கவேண்டிய நடவடிக்கைதான். அதே சமயம் தமிழ் மீடியம் பள்ளிகளான அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அவற்றில்தான் கல்வி அமைச்சர் முதல் கல்வி இயக்குநர்,ஆசிரியர்கள் வரையிலானோரின் குடும்பத்தினர் படித்தாக் வேண்டும் என்ற விதியை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தரத்தை சரி செய்வார்கள்.

தமிழில் படிப்பது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துக் கணிப்பு நடத்தினோம். எல்லா பாடங்களும் தமிழில் கற்பிக்கப்படவேண்டும். ஆங்கிலத்தை மொழிப் பாடமாகப் படிக்கலாம் என்றவர்கள் 63 சத விகிதம் பேர். எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பித்து, தமிழை மொழிப் பாடமாக மட்டும் படிக்கலாம் என்றோர் 37 சதவிகிதம். தமிழ் வழிக் கல்விக்கான ஆதரவு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விடப் பெருகியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

எங்கள் கருத்துக் கணிப்பு முடிவுகள் எதிர்காலம் பற்றி நம்பிக்கையூட்டுகின்றன, நிகழ்காலம் எப்படி இருந்தபோதும்.

சூரியக்கதிர் 1.2.2011

தி.மு.க ஆட்சிக்கு வராமல் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?

படித்தவர்கள் எல்லாரும் தவறாமல் தேர்தல் தினத்தன்று காலையே போய் தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தால் நிச்சயமாக தி.மு.க- காங்கிரஸ் அணி தேர்தலில் தோல்வி அடையும் வாய்ப்பு பலமாக இருக்கிறது என்பதை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என் அரங்கில் நடைபெற்ற தேர்தல்கள் காட்டுகின்றன.

விலைவாசி கடும் உயர்வுக்கு யார் பொறுப்பு என்பது ஒரு நாளைய தேர்தல் கேள்வி. காங்கிரஸ்-தி.மு.க ஆட்சிகள் என்று சொன்னவர்கள் 62 சதவிகிதம் . பதுக்கல் வியாபாரிகள் என்று கருதியோர் 30 சதவிகிதம். ( பேராசிரியர் அன்பழகன் சொன்னது போல ) யாரும் பொறுப்பு இல்லை. இயற்கைப் பேரழிவு போன்றது என்றவர்கள் எட்டு சதவிகிதம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொறுப்பான எதிர்க்கட்சியாக யாராவது செயல்பட்டிருக்கிறார்களா என்று கேட்டபோது , யாரும் இல்லை என்று 61 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். இடதுசாரிகளைக் குறிப்பிட்டவர்கள் 18 சதவிகிதம். அ.இ.அ.தி.மு.கவை சொன்னவர்கள் 14 சதவிகிதம். பா.ம.கவைக் கருதியவர்கள் 7 சதவிகிதம்.

தி.மு.கவுக்குள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் செல்வாக்குடன் இருப்பவர் மு.க.ஸ்டாலின்தான். கலைஞர் கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு அவரே என்று 70 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். அடுத்த இடத்தில் இருப்பவர் தயாநிதி மாறன். 14 சதவிகித ஆதரவு. மு.க. அழகிரிக்கும் கனிமொழிக்கும் தலா எட்டு சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

நேரடியாகவே ஒரு கேள்வியைக் கேட்டிருந்தோம். வரும் தேர்தலில் எந்த அணியை ஆதரிப்பீர்கள் ? தி.மு.க-காங்கிரஸ் அணியை ஆதரிப்போம் என்று வாக்களித்தவர்கள் வெறும் 13 சதவிகிதம்தான். அ.இ.அ.தி.மு.க, விஜய்காந்த், இடதுசாரிகள், ம.தி.மு.க அணியை ஆதரிப்போம் என்று வாக்களித்தோர் 57 சதவிகிதம் பேர். எல்லாரையும் நிராகரிக்கும் 49 ஓ வைப் பயன்படுத்தி ஓட்டு போடுவோம் என்றவர்கள்…….. ஆச்சரியமாக,30 சதவிகிதம் பேர் !

எனவே படித்தவர்கள் ஒழுங்காக ஓட்டு போடச் சென்றால், தி.மு.க ஆட்சியை இழக்கும். ( ஒரு பிரபல கல்லூரியின் வருடாந்தர சர்வேயிலும் இதே போல முடிவே வந்திருப்பதாக அறிகிறேன். அந்த சர்வே ஏனோ இன்னும் வெளியிடப்படவில்லை.)

படிக்காதவர்கள் மத்தியில் தி.மு.க ஆட்சியின் இலவசங்கள் எந்த அளவுக்கு செல்வாக்கை செலுத்தும் என்பதே, தி.மு.க இழக்கும் படித்தவர் ஓட்டை சரி செய்ய உதவ முடியும். அதே சமயம் அரசின் மது வியாபாரத்தால் கடுமையாக பாதிக்கபட்டிருக்கும் ஏழைக் குடும்பங்கள் அந்த பாதிப்பை விட இலவசங்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுப்பார்களா என்பதும், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஒரு குடும்ப ஆட்சி போன்றவை அவர்களுக்கு முக்கிய பிரச்சினைகளாக இருக்குமா என்பதும் தேர்தல் களத்தில் பரிசோதிக்கப்படவேண்டியவை.

ஆளுங் கட்சியும் சரியில்லை, எதிர்க்கட்சியும் சரியில்லை என்ற படித்தவர் மன நிலை, எங்கள் கருத்துக் கணிப்புத் தேர்தலில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. முப்பது சதவிகிதம் பேர் எல்லாரையும் நிராகரிக்கும் 49 ஓவை விரும்புகிறார்கள்.

49 ஓ மட்டும் மின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு பட்டனாக இருந்து, ரகசியமாக அதைப் பதிவு செய்யும் வாய்ப்பு இருக்குமானால், 50 சதவிகிதத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அதை ஆதரித்து ஒரு அரசியல் நெருக்கடியையே ஏற்படுத்திவிடுவார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. மின் இயந்திரத்தில் 49 ஓ பட்டன் வைக்கக் கோரி போடப்பட்ட பொது நல வழக்கு பி.ஜே.பி, காங்கிரஸ் அரசாங்கங்களால் இழுத்தடிக்கப்பட்டு சுமார் ஏழு வருடமாக உச்ச நீதி மன்றத்தில் முடிவு வராமல் காத்திருக்கிறது.

பகிரங்கமாக வாக்குச் சாவடியில் அதை அதிகாரியிடம் தெரிவித்து பதிவு செய்யும் முறை பலரையும் தயங்க( பயப்பட) வைக்கிறது. அது தவிர, எப்படி 49 ஓவைப் பதிவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை சாவடி அதிகாரிகள் பலரும் தெரிந்தோ தெரியாமலோ குழப்பி, வாக்காளரை அதைப் போடவிடாமல் தடுத்துவிடுகிறார்கள். புத்தகக் கண்காட்சியில் என்னை சந்தித்து உரையாடிய பல வாசகர்கள் இந்தப் பிரச்சினையைத் தெரிவித்தார்கள்.

49ஓ போடுவது எளிமையானது. நாம் வாக்குச்சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். இருக்கிறது என்று உறுதியானதும், உடனே நம்மை ஒரு நோட்டில் கையெழுத்திடச் சொல்லுகிறார்கள். கையெழுத்திட்டதும் விரலில் மை வைக்கப்படும். அடுத்து மின் இயந்திரத்தில் பதிவு செய்யச் சொல்வார்கள். அதற்கு பதில் 49 ஓ போடுகிறேன் என்று சொல்லிவிட்டு, முதலில் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்துக்குப் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி, இன்னொரு கையெழுத்திடவேண்டும். அவ்வளவுதான். தனி படிவம் எல்லாம் எதுவும் கிடையாது.

கண்காட்சியில் சந்தித்த வாசகர்களில் பலரும் ஓர் அரசியல் மாற்றம் வந்தே தீரவேண்டும் என்ற ஆர்வமும், ஆனால் அது எப்படி எங்கிருந்து வரும் என்று தெரியாத குழப்பமும், யாராவது வழி நடத்த மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் உடையவர்களாக இருந்தார்கள். “நீ விரும்புகிற மாற்றமாக நீ முதலில் இரு” என்ற காந்தியின் வாசகத்தைத்தான் எல்லாருக்கும் பதிலாகச் சொல்ல வேண்டியிருந்தது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு போடாதவர்கள் சுமார் 30 முதல் 35 சதவிகிதம் பேர். இதில் சுமார் பத்து சதவிகிதம் பேர் முதியோர், உடல்நலம் குன்றியோர் என்றே வைத்துக் கொண்டாலும் ஓட்டு போட வராத மீதி 20, 25 சதவிகிதம் பேர் ஓட்டு போட்டால், அரசியலில் பல மாற்றங்கள் நிகழமுடியும்.

ஓட்டு போட விரும்பும் பல வாசகர்களில் ஒரு வாசகி மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்த தகவல் கவலை தருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விண்ணப்பிக்க செல்லும்போது ரேஷன் அட்டையை முகவரிக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் சென்னை போன்ற பெருநகரில் வீட்டு வாடகை ஒவ்வொரு வருடமும் பிரச்சினையாகிக் கொண்டே போவதால், பக்கத்து தெருவுக்கு வீடு மாற்றியாக வேண்டியிருக்கிறது. அந்த வேகத்தில் ரேஷன் கார்டில் முகவரியை ரேஷன் அலுவலகம் மாற்றித் தருவதில்லை. இந்த முகவரிச் சிக்கலினால் தொடர்ந்து மூன்று முறை விண்ணப்பித்தும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப் படவில்லை என்று வருத்தப்பட்டார் அந்த வாசகி. தேர்தல் ஆணையம் வாக்காளரை அடையாளம் காண்பதற்கான வழிமுறையை இன்னும் எளிமையானதாக்கவேண்டும்.

ஊழல் அராஜகத்துக்கெல்லாம் எதிராக ஜனநாயகத்தில் இன்னமும் மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குச் சீட்டுதான். அதையும் பல விதங்களில் பலவீனப்படுத்த ஊழல் அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. இருக்கும் ஒரே ஆயுதத்தையும் நாம் இழந்துவிடவோ வீணாக்கவோ கூடாது என்பதுதான் வரப் போகும் தேர்தலின்போது நம் மனதில் நிறுத்த வேண்டிய முக்கியச் செய்தி.

தேர்தலையொட்டி தலைவர்கள் பேச்சுக்களில் விசித்திரமான சில வாக்கியங்கள், கருத்துகள் வெளியாகின்றன. யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்கிறார் டாக்டர் ராமதாஸ். மக்களுக்கும் அது முக்கியம்தான். ஆனால் அந்த யார் என்று, யாரை அவரோ மக்களோ நினைக்கிறார்கள் என்பதுதான் மர்மம்.

கருணாநிதியை எதிர்த்து ஒரே தொகுதியில் போட்டியிட நான் தயார் என்கிறார் விஜய்காந்த். அதை விட கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே தொகுதியில் போட்டியிடுவதையே நான் வரவேற்பேன். ஒருவேளை ஜெயலலிதாவும் அப்படி அறிவித்தால், கருணாநிதி வரும் தேர்தலில் போட்டியிடாமல் கூட இருந்து, விஜய்காந்த், ஜெயலலிதா இருவரையும் ஏமாற்றிவிடலாம்.

அவருக்கு வசதியாக மேலவை உருவாக்கப்படுகிறது. அதன் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கருணாநிதி மேலவை உறுப்பினராகிவிடலாம். ஜெயலலிதா, விஜய்காந்த், போன்றவர்கள் கூட இதே வழியைப் பின்பற்றலாம். தொகுதிக் கவலை இல்லாமல் எல்லாரும் தேர்தல் பிரசாரம் செய்யப் போகலாம்.

சென்னை சங்கமம் தொடக்க விழாவில் கருணாநிதி வானம் வசப்பட்டுவிட்டது. மானமும் அடுத்து வையமும் நம் வசப்படவேண்டும் என்று பேசியிருக்கிறார். வானம் வசப்படுவதென்றால் என்ன என்று ரொம்ப யோசித்ததில் 2ஜி அலைக்கற்றையைத்தான் சொல்லியிருக்கிறார் என்று புரிந்தது. நீரா ராடியா டேப்புகளால் இழந்த மானமும் மீட்கப்படவேண்டும் என்று அவர் ஆசைப்படுவது நியாயம்தானே.

கருணாநிதி சொல்லும் வையமும் வசப்படுவது என்றால் என்ன என்றுதான் புரியவில்லை. விக்கிலீக்ஸைத்தான் கேட்கவேண்டும். ஸ்விஸ் வங்கி முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் வங்கியில் கறுப்புப்பணத்தை வைத்திருக்கும் ‘வையத் தலைவர்கள்’பட்டியலை விக்கிலீக்ஸ் அசாஞ்சேயிடம் கொடுத்திருக்கிறார். அதிலிருக்கும் ஆசியத் தலைவர்கள் பட்டியலில் தமிழ்ப் பெயர்களும் இடம் பெற்று தமிழர்களின் மானம் காப்பாற்றப்படுமா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.

இந்த வாரக் கேள்வி:

சென்னை சங்கமத்தை அரசு செலவில் தமிழக அரசின் சுற்றுலா துறை தான் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் தமிழ் மையம் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்படியானால் ஏன் கலைஞர் கருணாநிதி சென்னை சங்கமச் செலவுக்கான தன் நன்கொடை ஒரு கோடி ரூபாயை அரசிடம் தராமல் தமிழ் மையத்திடம் கொடுத்திருக்கிறார் ?

இந்த வாரத் திட்டு:

உச்ச நீதி மன்றத்தின் எந்த உத்தரவையும் மதிக்காமல் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை முறைகேடுகளுடன் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை அனுமதித்து பலரும் சாகவும் காயப்படவும் காரணமாக இருந்து வரும் தமிழக அரசுக்கு இ.வா.தி.

கல்கி 22.1.2011

படித்துக் கிழிக்கிறோமா ?

முப்பத்து நான்கு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் சென்னைப் புத்தகத் திருவிழாவுக்கு ஒரு வருடம் கூட தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன். சென்ற வருடம் கண்காட்சி தொடங்குவதற்கு முன்தினம் இதய அதிர்ச்சியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சை முடிந்து திரும்பியபோது சந்தையின் கடைசி நாள். மருத்துவரின் சிறப்பு அனுமதி பெற்று கண்காட்சிக்குப் போய் சில மணி நேரங்களை அங்கே மகிழ்வுடன் செலவழித்தேன்.

எட்டு வருடங்களாக அங்கே என் அரங்கு இடம் பெறுகிறது. ஒவ்வோராண்டும் தினசரி தேர்தல் ஒன்றை அதில் நடத்துகிறோம். தினசரி கேட்கும் கேள்விக்கு ஓட்டளித்தால், மறு நாள் அதன் முடிவு வெளியிடப்படும். புத்தகக் கண்காட்சிக்குப் படித்த வகுப்பினரே வருவார்கள் என்பதால், பொது விஷயங்களில் அவர்களுடைய கருத்து என்ன என்று அறிவதே இந்த தேர்தலின் நோக்கம். இதை எழுதும்போது ஆறு நாள் தேர்தல் முடிந்துவிட்டது. இன்னும் ஏழு நாட்கள் பாக்கி உள்ளன.

ஆறு நாட்களிலும் மக்கள் கருத்து எப்படியெப்படி வெளிப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம். இந்த முடிவுகளுடன் எல்லாம் நாம் எல்லாரும் இயைய்ந்து போக வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் படித்தவர்களில் ஒரு முக்கியமான பகுதியினர் (தானாக முன்வந்து ஓட்டு போடும் மனநிலை உள்ளவர்கள்) என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள இது உதவும்.

முதல் நாள் கருத்துக்கணிப்பு: மரண தண்டனை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? எந்த குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்று ஓட்டளித்தவர்கள் 28 சதவிகிதம் பேர். சில குற்றங்களுக்குத் தரலாம் என்றவர்கள் 58 சதவிகிதம். எல்லா கொலைகளுக்கும் மரண தண்டனை தரவேண்டும் என்றவர்கள் 14 சதவிகிதம்.

உலகத்திலேயே எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். இந்தியாவில் தமிழகத்துக்குத்தான் முதலிடம். எனவே செக்ஸ் எஜுகேஷன் எனப்படும் உடல்-உளநலக்கல்வியைப் பள்ளிக் கூடத்தில் அறிமுகப்படுத்துவது பற்றிக் கேட்கப்பட்டது. தேவை இல்லை என்று ஓட்டளித்தவர்கள் நான்கு சதவிகிதம் பேர். எட்டாம் வகுப்பிலிருந்து தொடங்கலாம் என்றவர்கள் 56 சதவிகிதம் பேர். ப்ளஸ் ஒன் வகுப்பில் ஆரம்பிக்கலாம் என்றவர்கள் 40 சதவிகிதம் பேர்.

ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என்று அழுத்தந்திருத்தமாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், இலவச டி.வி, இலவச அடுப்பு முதலிய திட்டங்கள் எதற்கானவை என்று கேட்டோம். ஆளுங்கட்சியின் நன்மைக்கானவை என்றவர்கள் 38 சத விகிதம் பேர். மக்களுக்கு நன்மையானவை என்றவர்கள் எட்டு சதவிகிதம் பேர். இருவருக்குமே நல்லதல்ல என்றவர்கள் 54 சதவிகிதம் பேர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை,கணக்கு தணிக்கை அதிகாரியின் கணக்கு தப்புக் கணக்கு என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் அட்டகாசமாக அறிவித்த செய்தி, காலை செய்தித்தாட்களில் வந்த தினத்தன்று, இந்தக் கேள்வி தேர்தலுக்கு வைக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயண்டைந்தோர் யார்? ராசா, கனிமொழி, தி.மு.க என்றவர்கள் 19 சதவிகிதம் பேர். ராசா, கனிமொழி, தி.மு,க, மற்றும் காங்கிரஸ் என்றவர்கள் 76 சதவிகிதம் பேர். ஊழலே நடக்கவில்லை என்று வாக்களித்தவர்கள் ஐந்து சதவிகிதம் பேர்.

அடுத்த நாள், அ.இ.அ.தி.மு.கவின் எதிர்காலம் பற்றி கேட்டோம். நிரந்தர எதிர்க்கட்சியாகவே இருந்துவிடும் என்றவர்கள் 21 சதவிகிதம் பேர். அடுத்த தேர்தலுக்குப் பின் கரைந்து காணாமற் போய்விடும் என்றவர்கள் 13 சதவிகிதம் பேர். வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்பவர்கள் 66 சதவிகிதம் பேர்.

தமிழகத்தில் மூன்றாவது அணியைப் பற்றியது அடுத்த நாள் கேள்வி. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் தகுதியும் திறமையும் உடையவர் யார் ? காங்கிரஸ்தான் என்பவர்கள் ஒன்பது சதவிகிதம் பேர். டாக்டர் ராமதாஸ் என்பவர்கள் இரண்டு சதவிகிதம் பேர். விஜய்காந்த் என்பவர்கள் 28 சதவிகிதம் பேர். யாருமே இல்லை என்பவர்கள் 61 சதவிகிதம் பேர்.

அரசியல், திரைப்படம், இலக்கியம், சமூகம், கல்வி தொடர்பாக இன்னும் கேள்விகள் (தேர்தல்கள்) பாக்கி இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போதும் நம் சமூகத்தின் கிரீமி லேயரை சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. இவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்ப்பதே ஒரு கற்றல் அனுபவம். முக்கியமான மாற்றமாக ஒன்றை நான் பார்க்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன்பு பொதுவான படிக்கும் பழக்கம் குறைந்துபோயிருந்தது, அதைப் பற்றிய அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் பெரிதாக இல்லை. எல்லாருமே டி.வியில் ஆழ்ந்து போயிருந்தார்கள்.

ஒரு சில வருடங்களாக இந்த நிலையில் மாற்றம் இருப்பதை உணர முடிகிறது.தங்கள் குழந்தைகளுக்கு எப்படியாவது வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திவிடவேண்டுமென்ற துடிப்புள்ள நிறைய இளம் நடுத்தர வயதுப் பெற்றோர்களை புத்தகத் திருவிழாவில் சந்திக்க முடிகிறது. முன்பை விட நிறைய பெண்கள் வருகிறார்கள். குழந்தைகளும் வருகிறார்கள். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு கண்காட்சிக்கு வருபவர்களில் பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை இருந்ததை விட இப்போது மிக அதிகமாக இருக்கிறது. இது நிச்சயம் ஓர் ஆரோக்கியமான மாற்றம்.

அதே சமயம் படித்தவர்கள் மத்தியில் பொது அக்கறை குறைவாக இருப்பதை தொடர்ந்து பார்க்க முடிகிறது. குப்பைத் தொட்டிகளைத் தேடிப் பிடித்து காகித டம்ளர்களைப் போடுபவர்கள் எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது. கேண்டீனில் டோக்கன் வாங்குமிடமானாலும், சிற்றுண்டி வாங்குமிடமானாலும், எந்த ஒழுங்குக்கும் வராமல், வரிசை அமைக்காமல், இடையில் கையை விட்டு முந்திக் கொள்ளும் பழக்கம் கடுமையாகத் தொடர்கிறது.

வரிசையாக நில்லுங்களேன் என்று முண்டியடித்தவர்களிடம் ஒரு நாள் சொன்னேன். சலனமே இல்லை. இந்தக் கோளாறுக்கெல்லாம், கருணாநிதியும் ஜெயலலிதாவுமா பொறுப்பு, நாம் தானே பொறுப்பு என்று சத்தமாக சொன்னேன். சலனமே இல்லை. வெளிநாட்டுக்குப் போனால் ஒழுங்காக நடந்துகொள்கிறீர்கள், இங்கே மட்டும் ஏன் இப்படி என்று கேட்டேன். அப்போது கூட்டத்துக்கு வெளியில் இருந்த ஒருவர் “வெளிநாடு இல்ல சார். இங்கயே இருக்கற வெளிநாட்டு பேங்குக்குப் போனா கூட நம்ம ஆள் ஒழுங்கா வரிசையில நிக்கறான்” என்றார். அதற்கும் சலனம் இல்லை.

கழிப்பறைகளில் தாழ் சரியாக இல்லாதது, கை கழுவும் இடம் சேறாக இருப்பது, கேண்டீனில் சர்க்கரையே போடாமல் காபி கொடுப்பது எந்தக் குறையானாலும் உரியவர்களிடம் புகார் செய்து நிவர்த்தி செய்ய வேண்டுமென்ற அக்கறை படித்தவர்களிடம் குறைவாகவே இருக்கிறது. முணுமுணுத்துக் கொண்டும் புலம்பிக் கொண்டும் போய்விடுகிறார்கள்.

படிக்கிறோம். படிக்கிற படிப்பு நம்மை எப்படிப்பட்ட ஆளுமையாக ஆக்குகிறது, படிப்புக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி ஒவ்வொரு புத்தக் காட்சிக்கும் பின்னரும் என்னிடம் எஞ்சி நிற்கிறது. ஒருவேளை இதையும் தேர்தல் கேள்வியாக வைக்க வேண்டுமோ?

இந்த வாரப் பூச்செண்டு:

இந்தியாவுக்கு வெங்காயம் அனுப்பக்கூடாது என்ற எதிர்ப்பை மீறி அனுப்ப முடிவு செய்துள்ள பாகிஸ்தான் அரசுக்கு இ.வா.பூ.

இந்த வாரக் கேள்வி:

சி.பி.ஐ ரெய்டு செய்த தமிழ் மையத்துடன் சேர்ந்து தமிழக அரசு சென்னை சங்கமம் விழாவை நடத்தக் கூடாது, மையத்துக்கு அரசு பணம் கொடுக்கக்கூடாது, விளம்பரங்களில் தமிழ் மையம் பெயர் இடம் பெறக் கூடாது, தேவைப்படும் கிராமியக் கலைஞர்களை ஏற்பாடு செய்து தரும் பணிக்கு மட்டுமே மையத்தை அரசு பயன்படுத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

ஆனால், சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருக்கும் சங்கமம் விழா விளம்பரப் பலகைகள் அனைத்திலும், பத்திரிகை விளம்பரங்களிலும் தமிழ் மையம் பெயர் பெரிதாக உள்ளது. தமிழக அரசின் சுற்றுலா துறை பெயர் சிறியதாக இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு ஏன் பின்பற்றப்படவில்லை ?

கிராமியக் கலைஞர்களை கண்டுபிடித்து அழைத்துவர மையத்தின் உதவி தேவை என்று அரசு கூறுவது ஏன் ? தனியார் அமைப்பான தமிழ் மையம் ஆரம்பித்து சில வருடங்களே ஆகின்றன ஆனால் தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. கிராமியக் கலைஞர்கள் இதில் பதிவு செய்கின்றனர். கலைமாமணி விருது வழங்குவதும் இந்த அமைப்புதான். ஏன் அரசு தன் அமைப்பைப் பயன்படுத்தி கிராமியக் கலைஞர்களைத் திரட்ட முடியவில்லை ?

இந்த வாரத் தகவல் 1:

அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் 108 திட்டத்தைப் பற்றிய டி.வி விளம்பரங்கள் தமிழக அரசால், சன் டி.வி, கலைஞர் டி.வி இரண்டிற்கு மட்டுமே தரப்பட்டுள்ளன. இதற்காக அரசு இதுவரை அளித்துள்ள தொகை ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்கள். தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்வலர் குரோம்பேட்டை சந்தானம் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வாரத் தகவல் 2:

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதியின் பிறந்த நாளை ஜனவரி 15 அன்று மாநில அரசு சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கொண்டாடவிருக்கிறது. கடும் குளிரினால் பாதிக்கப்பட்டிருக்கும் உ.பியில் இதுவரை 300 பேர் விறைப்பால் இறந்திருக்கிறார்கள்.

இந்த வாரத் தகவல் 3:

லண்டனில் இந்திய தூதரகத்தில் இருக்கும் உயர் அதிகாரி அனில் வர்மா தன் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக ஸ்காட்லாந்து போலீசார் அவரிடம் விசாரித்ததையடுத்து, அவரை இந்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கல்கி 15.1.2011

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்…….

புது வருடக் கணக்கைத் தொடங்கிவிட்டார் கலைஞர் கருணாநிதி. இந்த வருடத்தின் முதல் பொய் – “ முதலமைச்சரை விடப் பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து அந்தத் தமிழுக்குப் பெருமையைத் தரக் கூடியவன்.”

பாடலாசிரியர் வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வரும் பிரதமர் மன்மோகன்சிங்கை விமான நிலையத்தில் வரவேற்கவேண்டிய “முதலமைச்சரின் கடமையை” செய்யாமல் வந்துவிட்டதாக கருணாநிதி பேசியிருக்கிறார். இது உண்மையென்றால் அடுத்த நாள் தமிழக அரசு சார்பில் முதல்வர் பிரதமரை சந்திக்கச் செல்லாதது ஏன் என்று அளித்த விளக்க அறிக்கையிலும் இதையேதானே சொல்ல வேண்டும் ? அதில் “முன்கூட்டியே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு செல்லவேண்டியதாயிற்று. அங்கே ஒளிவிளக்குகளால் கண்ணில் நீர் கசிந்தது. மருத்துவரை சந்தித்துவிட்டு பின்னர்தான் பிரதமரைக் காண செல்ல முடிந்தது” என்று விளக்கியிருக்கிறார்கள். “பிரதமரை வரவேற்பதை விட புலவரை கௌரவிப்பதே முதன்மையானது என்று முதலமைச்சர் கருதியதால் செல்லவில்லை” என்று தமிழக அரசு அறிக்கையிலும் சொல்ல வேண்டியதுதானே?

கிழிந்து கந்தலாகிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் ‘ கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது’ என்ற உத்தியை எப்போதும் பிரயோகித்துவரும் கருணாநிதி இப்போதும் அதே வேலையைச் செய்திருக்கிறார். அவ்வளவுதான். காங்கிரசுடன் உறவு எப்படியிருக்கிறது என்று நிருபர்கள் கேட்டபோது, ”எனக்கும் உங்களுக்கும் (பத்திரிகையாளர்களுக்கும்) உள்ள அளவு இருக்கிறது “ என்று பதில் சொல்கிறார் கருணாநிதி. அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது ? சங்கடமான கேள்விகளைத் தப்பித் தவறி ஏதேனும் ஒரு நிருபர் கேட்டால், “ யார்யா நீ ?”, “ உனக்கு என்ன அதைப் பத்தி ?”, “ உங்க வீட்டுலயா ரெய்டு நடந்துது ?” என்று எரிந்து விழும் உறவுதான் அவருடையது. தானே பதில் சொல்ல விரும்பும் கேள்விகளைக் கேட்பதற்கென்றே நிருபர்களில் ஒரு கோஷ்டியை தயார் செய்து வைத்திருப்பது அவரது உறவின் மறுபக்கம். இதே அணுகுமுறைதான் காங்கிரசுடனும் உள்ளது. ரெய்டு, ஸ்பெக்ட்ரம் போன்ற சங்கடமான பிரச்சினைகளில் தன் எரிச்சலைக் காட்ட பிரதமரைப் புறக்கணிப்பது; தான் விரும்பும் அறிக்கைகளை வெளியிட காங்கிரசுக்குள்ளே ஒரு தி.மு.க காங்கிரஸ் பிரிவை வைத்த்திருப்பது. இவைதான் அவரது கூட்டணி அணுகுமுறை.

‘புலவர்களை எப்போதும் மதிக்கும் ‘மன்னன்’ நான் என்று கருணாநிதி சொல்லியிருப்பது இன்னொரு பொய். ஜால்ரா அடிக்கும் புலவர்களை மதிப்பது என்று அதை திருத்தி வாசிக்க வேண்டும். வைரமுத்து தன் ஜால்ராவை நிறுத்தினால், அடுத்த நிமிடமே வேண்டாத புலவராகிவிடுவார் என்பது இருவர் மனசாட்சிக்கும் தெரியும். வாலி ஜால்ராவை நிறுத்தின அடுத்த நொடியில் ஆரிய நச்சுப் பாம்பாகிவிடுவார் என்பதும் அவருக்குத் தெரியும்.

ஓரிரு வாரங்கள் முன்புதான் சாகித்ய அகாதமி பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரிசு பெறும் நாஞ்சில் நாடனைப் பாராட்டி கருணாநிதியிடமிருந்து ஒரு அறிக்கை உண்டா? கேரளத்தில் இப்படிப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டால், உடனே முதலமைச்சர் எழுத்தாளர் வீடு தேடிப் போய் பாராட்டுகிறார். இங்கே “ யாருய்யா அவன் நாஞ்சில் நாடன் ? யாரு ஆளு ? கனி(மொழி) கூப்பிட்டா சங்கமத்துக்கு வரமாட்டேங்கறானாமே?” என்றுதான் இங்கே அரண்மனை உரையாடல்கள் நிகழும் வாய்ப்பிருக்கிறது. நாஞ்சில்நாடன் கிண்டலாகச் சொல்வது போல, பரிசு பெறும் எழுத்தாளன் தானே ஒரு மஞ்சள் சால்வையும் சிவப்பு சால்வையும் வாங்கிக் கொண்டு தலைமைச் செயலகத்துக்குப் போய் பல மணி நேரம் காத்திருந்து ஒரு சால்வையைப் போர்த்தி இன்னொன்றைப் போர்த்தவைத்து, தன் செலவில் படமும் எடுத்து பத்திரிகைகளுக்கு தரவேண்டிய நிலை.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாகித்ய அகாதமி ஏராளமான தமிழ்ப் படைப்புகளை பிற இந்திய மொழிகளிலும் பிற மொழிப் படைப்புகளை தமிழிலும் வெளியிட்டிருக்கிறது. இது போல ஒரே ஒரு ஆக்கப்பூர்வமான வேலையையாவது தமிழக அரசு செய்ததுண்டா? எழுத்தாளர் படைப்புகளை நாட்டுடைமையாக்குகிறேன் என்ற பெயரில் தகுதியானவர்களுடன் சேர்த்து கும்பலோடு கோவிந்தாவாக எந்தத் தகுதியும் இல்லாத வேண்டப்பட்டவர்களின் படைப்புகளுக்குக் காசு கொடுத்ததுதான் ஒரே சேவை. இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருதுகளை 25 ஆயிரம் ரூபாய் ரேட்டுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் வாடகைக்குக் குடியிருக்கும் அரசுக் குடியிருப்பு ஒழுகுகிறது. வேறு வீடு மாற்றிக் கொடுங்கள் என்று மனு போட்டு அலுத்துப் போய்விட்டார் என்று வேதனையுடன் நாஞ்சில் நாடன் ஒரு மேடையில் குறிப்பிட்டார்.

சாகித்ய அகாதமியின் தென் மண்டல அலுவலகம் – நான்கு தென் மாநிலங்களுக்குமானது, சென்னையில்தான் பல காலம் இயங்கி வந்தது. தங்களுக்கென்று தனியே நிலம் ஒதுக்கித்தரும்படி தமிழக அரசைக் கேட்டது சாகிதய அகாதமி. புலவர்களை மதிக்கும் அரசு, முரசுக்கட்டிலில் புலவரோடு சேர்த்துக் கோப்புகளையும் தாலாட்டு பாடித் தூங்க வைத்துக் கொண்டிருந்த வேளையில், கர்நாடக அரசு முந்திக் கொண்டது. கன்ண்ட படைப்பாளிகளும் அரசும் கை கோர்த்து நின்றதால், தென் மண்டல அலுவலகமே அங்கே போய்விட்டது. இங்கே எஞ்சியது சாகித்ய அகாடமியின் சென்னை அலுவலகம் எனப்படும் விற்பனை நிலையம்தான். அதற்கும் புலவர்களை மதிக்கும் அரசில் ஆபத்து வந்துவிட்டது. தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஒதுக்கிய இடத்தை காலி செய்யச் சொல்கிறது தமிழக அரசு. சாகித்ய அகாதமிக்கு சென்னையில் அலுவலகம் கூட இல்லாமல் போய்விடும் நிலை.

இலவசங்களை வழங்குவதையே அரசுக் கொள்கையாக வைத்திருக்கும் முதலமைச்சர் இலவசமாக இப்படி வழங்கும் பொய்களுக்கு நாம் தரும் விலை மிகப் பெரியது.

ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தன் ஆட்சியில் தொடரும் என்று மிகுந்த பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார் கருணாநிதி. எவ்வளவு காலத்துக்கு ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் ? கனிமொழியின் மகன் ஆதித்தன் அரசுக் கட்டிலில் அமரும்வரையா? அதற்கு அப்புறமுமா? தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடி 65 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச வேட்டி செல்ல அளிக்கப்படுகிறது. அதன் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மக்கள் தொகையில் ஏறத்தாழ சரி பாதி. மூன்று கோடி 11 லட்சத்து 23 ஆயிரம் ! ஐந்து முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்து சாதித்தது என்ன ? தமிழர்களில் சரி பாதி பேரை வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வைத்திருப்பதுதானா ?

சுமார் 15 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் இலவச டி.வி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தி.மு.க செயலாளர் தலைமையேற்று டி.வி.பெட்டிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அரசு விழாவில் ஏன் கட்சியின் மாவ்ட்ட செயலாளர் பெட்டிகளை வழங்குகிறார் என்றெல்லாம் நாம் அசட்டுத்தனமாகக் கேட்கப்போவதில்லை. அங்கே பெட்டி வாங்க வந்த விவசாயி விஜயகுமார் என்பவர் பெட்டியை வாங்கிக் கொண்டு திருப்பி அளித்துவிட்டு கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்தார். அந்தக் கடிதம் சாதாரணக் கடிதமல்ல. வர்லாற்றில் இடம் பெற வேண்டிய கடிதம்.

”மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத் துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று அந்தக் கடிதத்தில் விஜயகுமார் சொல்லியிருக்கிறார்.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார் : “சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.”

விஜயகுமாரின் கடிதம் கடிதம் அல்ல. செருப்பு. அல்லற்பட்டு ஆற்றாது அழும் ஒருவர் கண்ணீர் விடாமல் ரௌத்ரம் பழகி அரசுக்குக் கொடுத்த செருப்படி.

கலைஞர் அவர்களே, நீங்கள் முதல்வராக இருக்கும் காலம் வரையில் “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்”. குறைந்தபட்சம் ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’, ‘நான் ஏழைகளுக்காகவே வாழ்கிறேன்’, ‘புலவர்களை மதிக்கும் மன்னன்’ மாதிரி பொய்களைச் சொல்லாமல், இருக்கும் காலம் வரை இருந்துவிட்டுப் போங்கள். எங்கள் எரிச்சலாவது குறையும்.

இந்த வாரப் பூச்செண்டு:

சென்ற 2009ல் 321 உடல் உறுப்புகள் மட்டுமே தானமாகக் கிடைத்தன. 2010ல் 523 என்று தமிழக அரசின் உறுப்பு மாற்று திட்ட அமைப்பாளர் டாக்டர் அமலோற்பவநாதன் அறிவித்திருக்கிறார். முன்பை விட அதிகமாக உடல் (உறுப்பு) தானம் செய்ய முன்வரும் தமிழக மக்களுக்கு இ.வா.பூ

இந்த வாரத் திட்டு:

சி.பி.ஐ ரெய்ட் செய்த தமிழ் மையம் அமைப்புடன் சேர்ந்து சென்னை சங்கமம் திருவிழா நடத்த அரசுப் பணத்தை ஒதுக்கியிருக்கும் தமிழக அரசின் சுற்றுலா துறைக்கு இ.வா.திட்டு. ரெய்டுக்குள்ளான அமைப்பு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து குற்றமற்றவர்கள் என்று

கல்கி 8.1.2011

பிரிவுகள்

  • திண்ணை பிரிவுச் சின்னம்திண்ணை
  • கேணி பிரிவுச் சின்னம்கேணி
  • ஆப்பிள் தேசம் பிரிவுச் சின்னம்ஆப்பிள் தேசம்
  • நான் யார் பிரிவுச் சின்னம்நான் யார்
  • ஓ பக்கங்கள் பிரிவுச் சின்னம்ஓ பக்கங்கள்
  • தீம்தரிகிட பிரிவுச் சின்னம்தீம்தரிகிட
  • 49 ஓ பிரிவுச் சின்னம்49 ஓ
  • மனிதன் பதில்கள் பிரிவுச் சின்னம்மனிதன் பதில்கள்
  • ஓவியம் பிரிவுச் சின்னம்ஓவியம்
  • திரை பிரிவுச் சின்னம்திரை
  • ஃபோட்டோ பிரிவுச் சின்னம்ஃபோட்டோ
  • நண்பர்கள் படைப்பு பிரிவுச் சின்னம்நண்பர்கள் படைப்பு
  • ஞானபாநு நூல்கள் பிரிவுச் சின்னம்ஞானபாநு நூல்கள்
  • பரண் பிரிவுச் சின்னம்பரண்
  • அஞ்சல் பிரிவுச் சின்னம்அஞ்சல்

படங்கள்

கேணி அமைப்பின் சின்னம்

கேணி

கேணியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 11, ஞாயிறு மாலை 4 மணி.

பேசுபவர்: பின்னர் அறிவிக்கப்படும்.

இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர். சென்னை 78.

நன்றி என்ற கையெழுத்து வடிவம்

நன்றி

இந்த இணைய தள முயற்சியை எனக்கு சாத்தியப்படுத்திய நண்பர்கள்

  • த.அருளாளன்
  • கரு.அண்ணாமலை
  • ராஜாராம்
  • டிஜிகிளிஃப் நண்பர்கள்
  • இரா. பாலாஜி
  • மு. இராஜேஷ்
  • த. நவநீதகிருஷ்ணன்

மற்றும் பர்ப்பிள் ரெயின் சொல்யூஷன்ஸ் நண்பர்கள்

  • பிரபாகரன்
  • மயிலை மணி

அனைவருக்கும் என் நன்றி

ஞாநி